பக்கங்கள்

Friday, July 12, 2013

தமிழை வாசிக்க வைப்போம் - ஜி. ஜெயராஜ்

திரு. ஜெயராஜ்  தினமணியில்  எழுதிய  கட்டுரை  
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பது தேசியக் கவியின் ஆசை. ஆனால், தமிழகத்தில் பார்க்கும் இடமெல்லாம் தமிழாக இருக்கிறதா என்பதே ஆய்வுக்குரியது.
இந்தியாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டவை.
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அலுவல் மொழியாகவும் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 8 கோடிக்கும் அதிகமானோர் பேசும் மொழியாகவும் இருக்கிறது தமிழ்.
2,500 ஆண்டு பழமை வாய்ந்த "செம்மொழியாக' தமிழ் இருக்கிறது என்பது தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை தரக்கூடியதாக இருந்தபோதும், உணர்வுப்பூர்வமாக தமிழ் நம்மோடு இருக்கிறதா?
மொழி தெரியாத ஏதோ ஒரு இடத்தில் நாம் தனித்து விடப்படும்போது, உதவிசெய்ய வருபவர் தமிழில் பேசினால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும்? நாம் பாதுகாக்கப்பட்டு விடுவோம் என்ற உணர்வே அது. அதாவது தமிழ் மொழி நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை பிறக்கிறது அல்லவா? அது மொழியின்மீது நமக்கு உள்ள ஆழ்ந்த உறவைக் காட்டுகிறது. அது நமது முதல் உறவு, நமது அடையாளம்; பிறகுதான் தாய், தந்தை எல்லாம்.
தமிழ் மொழியிலிருந்து தனிமைப்படும்போது பெறுகின்ற அந்த உணர்வை, நாம் தமிழோடு இருக்கும்போது மறந்து விடுகிறோம். நமது அடையாளத்தையே நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். முதலில் நாம் பார்க்கும் இடமெல்லாம் தமிழ் இருக்கிறதா என்று ஒருமுறை சுற்று முற்றும் பார்த்தாலே போதும். வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளின் பெயர்ப் பலகைகள் நம் கண்ணெதிரே தெரிகின்றவை. அவற்றில் நூற்றுக்கு 75 சதவீதம் தமிழ் பிரதானமாக இல்லை.
தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் வலம் வந்தால் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழை விட ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது. கொட்டை எழுத்துகளில் ஆங்கிலத்தைப் பிரதானமாக எழுதி வைத்திருக்கின்றனர், அல்லது ஆங்கில மொழியை அப்படியே தமிழ் வார்த்தையாக எழுதிவிடுகின்றனர்.
ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆண்டதால் ஏற்பட்ட பாதிப்பா, அல்லது ஆங்கிலமே உலக அளவிலான தொடர்பு மொழி என்ற மாயையால் இதைக் கையாள்கின்றனரா என்று தெரியவில்லை. இந்த நிலை நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்றவற்றில் இல்லை.
கேரளத்தில் வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் பெரும்பாலும் மலையாளமே பிரதானமாக இடம்பெற்றிருக்கிறது. ஆங்கிலம் இரண்டாவதாக சிறிய அளவில் இருக்கிறது. அண்மையில் திருவனந்தபுரம் சென்றபோது, அவ்வப்போது இது எந்த ஊர் என, தமிழ் மட்டுமே தெரிந்த எங்களுடைய கார் டிரைவர் கேட்டுக்கொண்டே வந்தார். அத்தனை பெயர்ப் பலகைகளிலும் மலையாள மொழியே பெரிதாகக் காணப்பட்டது. ஆங்கிலம் சிறிய எழுத்தில் இருந்ததால் அடையாளம்காண முடியவில்லை.
ஆங்கிலத்தில் பேசுவதையே இன்றைக்கும் தமிழர்கள் நாகரிகமாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும், அழைப்பிதழை ஆங்கிலத்தில் அச்சிடுகின்றனர்.
பள்ளி, கல்லூரி அழைப்பிதழ்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் அச்சிடப்படுகின்றன.
தமிழக அரசு அலுவலகங்களில் இன்னமும் ஆங்கிலம் கோலோச்சுகிறது. நீதிமன்றங்களிலும் ஆங்கிலத்தில்தான் வாதங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் தமிழுணர்வு மங்கிப்போகாமல் இருக்க வேண்டுமென்றால் பார்க்கும் இடங்களிலெல்லாம் தமிழை வாசிக்க வைப்பதுதான் நமது மொழியின் வெற்றிக்கு முதல்படியாக இருக்கும்."

Sunday, May 12, 2013

சரப்ஜித் சிங் - உளவாளி / குடிகாரர் /வீர மைந்தர்


சரப்ஜித் சிங் - பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர். பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர் எனக் கூறி பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை -
                                                   தியாகி என்று சொல்கிறார்கள் - 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறார் - மூன்று நாள் அரசு விடுமுறை விடப்படுகிறது - ஒரு கோடி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப் படுகிறது .... அரசியல்வாதிகள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

1991 ஆம் ஆண்டு கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு 2013 வரை சிறையில் இருந்த ஒரு மனிதன் இறந்ததற்கு இந்திய அரசும், ஊடகங்களும் நடத்தும் தேசிய உணர்வும், முதல் பக்க செய்திகளும், எனக்கு ஒரு பக்கம் மிகுந்த வேதனையைத்தான் தருவிக்கிறது. சரப்ஜித் சிங் சிறையில் கொடூரமாய்த் தாக்கப்பட்டது வருத்தம்தான். இந்தச் சமயத்தில் அவரைப் பற்றி எழுதுவது வேதனையாக இருந்தாலும் வேறு வழியில்லை.  

இந்திய அரசின் உளவாளி  என்று அவரை பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்தியா இல்லை என்றும், அவரது குடும்பத்தினர் குடிமயக்கத்தில் பாகிஸ்தானுக்குள்ளே சென்றுவிட்டார் என்றும் சொல்லுகிறார்கள். இந்தியாவின் உளவாளி அவர் இல்லையென்றால் "அவர் இந்தியாவின் வீர மைந்தர்" என்று இந்தியப் பிரதமர் ஏன் சொன்னார் என்று தெரியவில்லை. என்ன செய்து இந்தியாவின் வீரத்தைக் காண்பித்தார் என்றுதான் தெரியவில்லை.


இந்தியாவில் பாகிஸ்தானிய உளவாளிகள் செய்வது தவறென்றால் அங்கேயும் நமது உளவாளிகள் குழப்பம் விளைவிப்பது தவறுதான். சரி சிங் உளவாளி இல்லையென்றால் ஏன் அவர் வீர மைந்தர்? அநியாயமாக தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகள் இந்தியா என்ன செய்து  கொண்டிருந்தது? {இரண்டு நாட்களாக சோனியா விட்டு முன்பு சீக்கியர்கள் நடத்தும் போராட்டம் இறந்த சிங்குக்கு அனவருக் கொடுக்கும் அனுதாபத்தின் முன்பு ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது - 3000 சிங்குகள் கொல்லப் பட்ட வழக்கில் இருந்து முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் சிங் விடுதலை செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து சீக்கியர்கள் நடத்துப் போராட்டம்}

தவறாய்க் கைது செய்யப் படுவது தடுக்கப் பட வேண்டும் என்றால், மற்ற நாடுகளில் இந்தியப் பிரஜைகள் இறப்பது இந்தியாவின் வீரம் என்றால், அடிக்கடி சுட்டுக் கொள்ளப்படும் தமிழக மீனவர்கள்தான் இந்தியாவின் வீர மைந்தர்கள்.

ஆனால் இலங்கையினால் கொல்லப்படும் தமிழர்களை யாரும் வீர இந்தியர் என்று சொல்வதில்லையே  ஏன்? {இந்தியர்கள் என்றே சொல்லுவதில்லை அப்புறம் என்ன வீர இந்தியர்}

குண்டுகள் முழங்க அரசு அடக்கம் செய்திருக்கிறார்களா?

ஊடகங்கள் முதல் பக்க செய்திகளையாவது வெளியிட்டு இருக்கின்றனவா?  இவர்கள் அப்பாவிகள் இல்லையா? இலங்கை காட்டுமிராண்டி அரசு இல்லையா?

அநியாயமாய்ச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை {ஏறக்குறைய முப்பது மீனவர்களை } விடுவிக்க வேண்டி தங்கச்சி மடத்தில் நடத்திய போராட்டம் பற்றி சிங்கின் மரணம் குறித்து முதல் பக்கத்தில் வெளியிட்ட பத்திரிக்கை கடைசிப்பக்கத்தில் கூட இந்தச் செய்தியை வெளியிட வில்லை.  நல்ல ஊடகங்கள்.

எந்த அரசும் இதைக்  கண்டுகொள்வதும் இல்லை. ஒருவேளை இறப்பது சிங் என்றால் தான் கண்டு கொள்வார்களோ? அல்லது சுடுவது பாகிஸ்தான் என்றால்தான் இறப்பவர்கள் வீரர்கள் ஆவார்களோ என்னவோ... நல்ல அரசுகள்.

குடிமயக்கத்தில் போனால் வீரர்கள் --- தொழிலுக்குப் போனால் திமிர் பிடித்தவர்கள்... பாகிஸ்தான் செய்தால் கொடூரம் -- இலங்கை செய்தால் பாதுகாப்புக் காரணங்கள்...

ஆக மொத்தம் ---- சாதி அரசியலுக்கும் மத அரசியலுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை... பாதிக்கப்படுவதும் பிரிக்கப் படுவதும் தமிழர்கள்தான்.



Sunday, May 5, 2013

காவல் தெய்வம் அய்யா


அய்யா எல்லா இனமும் நல்ல மனதோடு வாழ வேண்டும் என்கிற ஒரு பெரும் தலைவர், என்ற செய்திகளும்..... மக்கள் சாமியாகக் கருதும் ஒரு தலைவர் என்றும்..... அய்யாவைக் கைது செய்து மனித உரிமைக்கு எதிரான செயல் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே .... ஆனால் தலைப்புக்குத் தலைப்பு வன்னியர் , வன்னியர், வன்னியர்.... என்று எழுதிக் கொண்டிருக்கும் சிலர் இருக்கிறார்கள்...

அதற்கான செய்திகளைத் தொடர்ந்து படித்து, மனித உரிமையையும், சமத்துவத்தையும் நிலை நிறுத்தி, அய்யாவை சாமியாக, காவல் தெய்வமாக  ஏற்றுக் கொள்ளும் நண்பர்கள் பின்வரும் வலையில் தொடர்ந்து படிக்கலாம். இதன் வழியாக அய்யாவின் வழியில், கண்ணசைத்து.... நாமும் மனித நேயத்தையும், மனித உரிமையையும் நிலை நாட்டலாம்...

அய்யா அனுபவிக்கும் துன்பங்கள்

http://arulgreen.blogspot.com/2013/05/Human-rights-in-Tamil-Nadu-PMK.html

http://arulgreen.blogspot.com/2013/05/Marakkanam-Vanniyar-murder-Makkal-tv.html


இது ஒரு புறம் இருக்க....

மறு பக்கத்தையும் பார்க்க வேண்டுமல்லவா...

அய்யாவின் பயோ டேட்டா  ---- இங்கே படியுங்கள் 

அய்யா பயப்படுகிறாரா --- பதில் சொல்ல இங்கே படியுங்கள் 

தண்டனை சரி ----- என்கிறார் மற்றொருவர்...

வேட்டுவோருக்கு கேள்வி கேட்கிறார்.... கேள்விகள்....


படிப்பவர்கள், முடிவெடுக்க வேண்டியது அவசியம்....

மக்களை சாதியின் அடிப்படையில் அடிமைகளாக நினைக்கும் ஒரு பிரிவினர்.... அதாவது தங்களை உயர்ந்தவர்கள் பிறர் தாழ்ந்தவர்கள் என்று நினைத்து அவர்களோடு உறவாடுவதை... திருமணம் செய்து கொள்வதை... அப்படிச் செய்தால் கொல்வோம் , கலவரம் செய்வோம், கண்ணசைப்போம்,  கருமாதி செய்வோம் என்று கூட்டம் கூட்டி மனிதர்களைக் கூறு போட நினைக்கும் இவர்களுக்கு .... மனித உரிமை பற்றிப் பேசுவதற்கான அருகதை இருக்கிறதா என்று....

வாசகர்கள் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்... நான் ஒன்றும்  சொல்வதற்கில்லை .


Saturday, May 4, 2013

வெளிவரும் காங்கிரசுகளின் கொடூரம்


  • சிறைவாசம் செல்வதற்கு ஏற்கனவே நான்கு வார அவகாசங்களை வழங்கியிருந்த நீதிமன்றம் இப்போது மேலும் நான்கு வாரங்களை உச்ச நீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு வழங்கியிருக்கிறது. ரூ. 278 கோடிகள் மதிப்பிலான மீதியிருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதற்காக 'மனிதாபிமான' அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
    • மனிதாபிமானம் என்பதற்கான புதிய விளக்கம். இதுபோல பல வார்த்தைகளுக்கு புதிய விளக்கம் கொடுக்கத் தயாராய் இருக்கிறோம் என்று அறிவிப்புதான் இது.
  • டெல்லியில் ஐந்து வயதுப் பெண் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ரூ. 2000 கொடுத்து வழக்கு தொடுக்க வேண்டாம் என்று கேட்டிருக்கிறார்கள்.
    • ?????????????
  • நரேந்திர மோடியை விமர்சித்த பிறகு நித்திஷ் குமார் அரசிற்கு, மத்திய அரசு 12,000 கோடி பின்தங்கிய பகுதிகளுக்கு உதவும் நிதி வழங்க முடிவு செய்திருக்கிறது. நாட்டின் நலன் மட்டுமே கருதி இந்த முடிவை உண்மைக்கும் நீதிக்கும் சொந்தக் காரரான காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கிறது.
    • ஸ்டாலின் வீட்டில் உண்மையாய் ரெய்டு நடத்திய மாதிரி.........
  • 29 வயதான கிருஷ்ணா என்கிற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் [கர்நாடகா] தனது சொத்து மதிப்பு ரூ. 910 கோடிகள் என்று   தெரிவித்திருக்கிறார். 
    • ஏழைகளின் நண்பன் காங்கிரஸ் என்று உலகுக்கு உணர்த்துவதற்காகவும், ஏழை இளைஞர்களுக்கு மிகப் பெரிய க்ரியா ஊக்கியாக இருப்பதும் தான் அவரது வாழ்க்கை இலட்சியமாம்.
  • பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் படுவதற்கு பெண்களின் பார்வையே காரணம் என்று சத்யதேவ் கட்டாரே என்கிற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் [மத்தியப் பிரதேசம்] சொல்லியிருக்கிறார்.  
    • எல்லாப் பெண்களின் கண்களையும் குருடாக்க வேண்டும் என்றுதான் சொல்ல நினைத்தாராம்...   என்று விட்டு விட்டாராம்.
  • பாலியல் பலாத்காரம் டெல்லியில் மட்டுமா நடக்கிறது .... எல்லா இடங்கலிலும் தான்... பாலியல் பலாத்காரத்தை கட்டுப் படுத்துவதுதான் உள்துறை அமைச்சகத்தின் வேலையா என்று அறிவுப் பூர்வமாகக் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த [உத்திரப் பிரதேசம்] ஒரு அமைச்சர் கூறியிருக்கிறார். 
    • கடற்படைக்கு மீனவர்களைக் காப்பதுதான் வேலையா? உள்துறைக்கு மக்களைக் காப்பதுதான் வேலையா... நிதி அமைச்சகத்துக்கு விலைவாசியைக் கட்டுப்படுத்துவதான் வேலையா ... சீனர்கள் ஊடுருவாமல் தடுப்பதுதான் இராணுவத்தின் வேலையா .... என்றெல்லாம் கேட்க நினைத்தாராம்...
  • தெற்கே தினம் தினம் தமிழக மீனவர்களைக் கொள்ளும் இலங்கையிடம் அமைதி... பத்தொன்பது கிலோ மீட்டர் வரை ஊடுருவிய சீனர்களிடம் பேச்சு வார்த்தை ... பாலியல் தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக நீதி கேட்ட பெண்ணிடம் மட்டும் 'அறை' --- 
    • என்ன வீரம் சார்... என்ன கொடுமை சார்?


Thursday, April 25, 2013

உலகம் - மனிதம் - 1


நாம் வாழும் உலகம், இயற்கை என்பது உருவானதா அல்லது உருவாக்கப்பட்டதா என்ற விவாதத்தை நாம் தொடர வேண்டிய அவசியம் இல்லை.

இயற்கை எப்படி இருக்கிறது என்பதை மட்டும் நாம் சிந்தித்தால் நல்லது.

அறிவியலாளர்கள் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவர்கள் சொல்லும் அடிப்படைக் கருத்துக்களை யாரும் மறுக்கவும் முடியாது.
உலகம் எப்படித்தோன்றியது என்று அவர்கள் சொல்லும் கருத்துருவிலும், பரிணாமவாதத்திலும் நமக்கும் அடிப்படையில் உடன்பாடு உண்டு.

ஆனாலும் அதன் தொடர்ச்சிகள், அதன் விளைவுகள் எந்த அளவிற்கு நமது வாழ்க்கைக்கு உதவும் என்பது ஒரு புறம் இருந்தாலும்,
அது கொணரும் கேள்விகளும் நிறைய இருக்கின்றன என்பதைத்தான் நாம் முன் வைக்க நினைக்கின்றோம்.

இதனை மிகவும் விரிவாகவே மெய்யியலாலர்களும், இன்னும் அறிஞர்களும் பல்வேறு கோணங்களிலிருந்து விவாதித்து, பல விளைவுகளையும், எதிர் மறையான முடிவுகளையும் முன்வைக்கிறார்கள்.
அது நமக்குத் தேவையற்றது.

இக்கட்டுரையின் நோக்கம் மிகவும் அடிப்படையானது. இவ்வுலகில் நமது இருப்பின் பொறுப்புனர்வைப் பற்றி பேசுகிறது.
அதற்கான சில கேள்விகளை முன்வைக்கிறது. அவ்வளவே!

இயற்கைக்கு நோக்கம் ஒன்றும் இல்லை. அதுவாகத் தோன்றியது. அதுவாக இருக்கிறது. அதுவாக மறையும் - என்ற கொள்கையோடு பலர் நமது மத்தியில்  இருக்கிறார்கள்.
அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். அதில் படித்தவர்களும் உண்டு, படிக்காதவர்களும் உண்டு.


கோடிக்கணக்கான ஆண்டுகளாய் நெருப்புப் பிழம்பாய் இருந்தது பின் பிரிந்து
(எதிலிருந்து நெருப்பு வந்தது என்று கேட்கக் கூடாது)
அதன் பிறகு குளிர்ந்து, நீர் வந்து, மரங்கள் தோன்றி
அதன் பிறகு ஒன்று இரண்டு என உயிர்கள் தோன்றி, அது


பலதாய் பெருகிஇத்தகைய சூழ் நிலைகளுக்கு ஏற்ப
எதெல்லாம் ஈடு கொடுக்க முடிந்ததோ அவைகள் வாழ்ந்து -
பின் வாழ முடியாதவைகள் எல்லாம் மடிந்து -
இறுதியில்,
இயற்கையின் போக்கிற்கு ஈடு கொடுக்க முடிந்தவைகள் மட்டும் உயிர் வாழ்கின்றன.
அப்படி வாழ்ந்த உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் பல நிலைகளைக் கடந்து மனித உயிர்கள் தோன்றி -
நாம் இன்று இருக்கக் கூடிய நிலையை அடைய கோடிக்கணக்கான ஆண்டுகள்ஆகிவிட்டன.


இதனடிப்படையில், பலர் தங்கள் வாதங்களையும் முன் வைக்கிறார்கள்.
இதில் எதுவுமே ஒரு நோக்கத்தோடு நடை பெற வில்லை.
அதுவாய்த் தோன்றியது. அதுவே நடந்தது.
மனித உயிர்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்பது
இயற்கையின் நோக்கம் அல்ல.
காலப் போக்கில் அது நடந்தது. பரிணாம வளர்ச்சியில் இது நடந்ததே தவிர இதற்கு நோக்கம் கற்பிப்பது அபத்தம் என்று சொல்கிறார்கள்.

ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியது... சூழல் அவைகளை வாழ வைக்கிறது. புதிய உயிர்களை தோற்றுவிக்கிறது. அதைத்தாண்டி எப்படி உயிரினம் தோன்றுகின்றன என்று யோசித்தால் - பலம் மிக்கவை வாழ்கின்றன. பலமற்றவை வீழ்கின்றன. இதைத் தாண்டி ஒன்றும் இல்லை என்கின்றனர்.

அப்படித்தானா?

தொடரும்.... 

Wednesday, March 20, 2013

மக்களாட்சியும் தமிழின எழுச்சியும்


இந்த மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி கொண்டுவரப் படும் தீர்மானம் - அதில் இந்தித் திருநாட்டின் அணுகுமுறை - இதையெல்லாம் தாண்டி தமிழகத்தில் உருவான இந்த பேரெழுச்சி தான் எனக்கு மிக முக்கியமானதாகப் படுகிறது.

இந்தித் துணைக் கண்டத்தின் மிகப் பெரிய சக்தியாக விளங்கும் இந்தி நாட்டின் வல்லமை குறித்து இங்கு யாரும் மிகப் பெரிய சர்ச்சை எல்லாம் உருவாக்க வில்லை. ஒரு ஜன நாயக நாட்டில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை உடைய இனங்கள் ஒன்றாக வாழும் போது நிச்சயமாக சிறு இனங்கள் மதிக்கப் படாமல் இருப்பது நடக்கத் தான் செய்யும். சில சமயங்களில் இந்த மாதிரி அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது தெரியாமல் நடக்கிற விஷயம். சில சமயங்களில் ஓர் இனம் தான் அங்கீகரிக்கப் பட வில்லை என்பதை ஆள்பவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் மிகக் கொடிய விஷயம். சிற்றினக் குழுக்கள் தங்களது அங்கீகாரம் பற்றியெல்லாம் எண்ணக் கூடாது என்று நினைப்பதுதான் மிகவும் மோசமானது. நம் நாட்டில் அதுதான் நடக்கிறது என்று தோன்றுகிறது.
இஸ்லாமியர்கள் தனகளது அங்கீகாரம் பற்றி பேசக் கூடாது. தமிழர்கள் தங்களது அங்கீகாரம் பற்றி நினைக்கக் கூடாது என்றெல்லாம் நினைப்பது எல்லாம் மெஜாரிட்டெரியனிசத் தின் வெளிப்பாடுதான். 

இந்தி(ய) நாட்டில் எல்லா குடிமக்களும் மதிக்கப்படுகிறார்கள் என்ற நினைப்பை திரு மன்மோகன் சிங் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மை நிலவரம் அது இல்லை என்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள் அல்லது இஸ்லாமிய மக்கள் நினைக்கிறார்கள் என்றால் ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்? ஏன் தனது குடிமக்களில் சிலர் அவ்வாறு நினைக்கிறார்கள் - எங்கே தவறு நடந்திருக்கிறது என்று யோசிக்க வேண்டும். அப்படி நினைக்கிற போதுதான் அந்த நாட்டின் குடிமக்கள் தான் இந்த நாட்டின் உறுப்பினர் என்கிற உண்மை நிலையை அடைவார்கள்.

அதை ஒரு போதும் செய்யாமல் - என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பிரதம மந்திரிக்குத் தெரியப் படுத்துவோம் - இதை அவருக்குச் சொல்வோம் என்று மந்திரிகள் சொல்வதைக் கேட்கும் போது பிரதம மந்திரி பேப்பர் படிப்பதில்லை,  செய்திகள் பார்ப்பதில்லை என்றுதான் தோன்றுகிறது. இது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. எதோ மன்னராட்சி நடப்பதைப் போல அரசனுக்குத் தெரியப் படுத்தும் தலையாட்டி மந்திரிகள் சொல்லுவதைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது.

சில பேர் கேட்கலாம் - இப்படி ஒவ்வொரு போராட்டத்திற்கும் பதில் சொல்லுவதும் அதற்குண்டான அங்கீகாரத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் பிரதம மந்திரிக்கு வேறு வேலையே இல்லையா.
தன் நாட்டு குடிமக்களின் நலனை விட வேறு என்ன அடிப்படைவேலை இருக்கிறது?

அதுமட்டுமல்ல - எப்போது நாம் மக்களாட்சி என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோமோ அப்போதே நாம் இது போன்ற போராட்டங்களுக்குச் செவிமடுக்க வேண்டியது மிக அவசியமாகிறது. இல்லையெனில் இலங்கை அரசு தமிழர்கள் மேல் தொடுத்த இனப் படுகொலைக்கும், இந்திய அரசு தமிழரின் குரலுக்குச் செவி மடுக்காததற்கும் எந்த விதமான வேறு பாடும் இல்லை.

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]][]


ஏன் நான் ஒவ்வொரு முறையும் போராட்டங்களுக்கு ஆதரவாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நான் என்னையே கேட்டுக் கொள்வது உண்டு.

இந்த நாட்டில் எதுவுமே சரியில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு பெசிமிஸ்ட்டா நான்?
அல்லது பாலாவை ஒரு சாடிஸ்ட் என்று சிலர் கூவுவதைப் போன்று, பலர் போராடுவதில் சுகம் காணும் ஒரு சாடிஸ்டா நான்?
அல்லது போராடி போராடி அடி வாங்கி வீங்குவதில் சுகம் காணும் மசோக்கிஸ்டா?
பெசிமிஸ்டும் இல்லை சாடிஸ்டும் இல்லை - ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

ஜனநாயக நாட்டில் தங்களது அங்கீகரத்தையும் உரிமைகளையும் போராடித்தான் பெற வேண்டும் என்று மக்களாட்சித் தத்துவத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிற சாதாரண இந்திக் குடிமகன்.

எதெல்லாம் எம் இனத்திற்கான அவமானமாக இருக்கிறதோ - எப்போதெல்லாம் நாம் அழிக்கப்படும் சூழலில் இருக்கிறோமோ - ஆபத்தான சூழலில் இருக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த ஜன நாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துப் போராடும் மக்கள் இந்த நாட்டின் மீது கொண்டிருக்கிற நம்பிக்கை நீர்த்துப் போய் விடக் கூடாது என்று நினைக்கும் குடி மக்களின் இனத்தில் நானும் ஒருவன்.

இந்தி நாடு என் தாய் நாடு இல்லை என்றாலும் அது என் நாடு என்று நினைக்கும் சில கோடிகளில் நானும் ஒரு கடைக் கோடி.

நம்மைக் காப்பாற்ற இன்னொரு காந்தியோ இன்னொரு காமராஜரோ வருவார் என்று காத்துக் கிடப்பதைக் காட்டிலும், ஒன் மேன் ஆர்மியில் நம்பிக்கை இழந்த ஆனால் மக்களின் மகத்தான சக்தி மீது நம்பிக்கை கொண்டவன்.

ஐந்து வருடத்திற்கு மட்டும் அரசியல் என்று மக்கள் நினைப்பதைத் தாண்டி, அரசியல் தளத்தில் மக்கள் தொடர்ந்து பங்கெடுக்கிற குடிமக்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பலர் போல் ஒருவன்.

[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]

இந்த தமிழின எழுச்சி மிக அவசியமானதும் மிகவும் தேவையானதும் கூட.
நான் இந்த எழுச்சி அவசியம் என்பதனால் தமிழகம் பிரிந்து விட வேண்டும் என்று எந்த விதத்திலும் நினைக்க வில்லை. இந்தி(யா) என்கிற எமது நாடு பிரிந்து போய் விடக் கூடாது என்பதிலும் நான் உறுதியாய் இருக்கிறேன்.

இது மற்ற மாநிலங்களில் எல்லாம் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கும், அவர்களது சொத்துக்களை சுரண்டிக் கொழுக்கும் நம் பிற இனச் சகோதர்கள் கொக்கரிக்கும் நாட்டு ஒற்றுமை அல்ல. ஒரு நாடு என்பது எல்லா இனங்களையும் மதித்து நடக்க இந்த நாடு உலகத்திற்கு இன்னும் ஒரு மாதிரிகையாய் இருக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணமே.

இந்த எண்ணம் இந்தியக் கலாச்சாரத்தில் ஊறிக் கிடக்கிற எல்லா இனத்தவருக்கும் வர வேண்டியது அவசியம் -    கொழுப்பதற்கு மாத்திரம் அல்ல.  இதைக் குடிமக்கள் மட்டுமல்ல ஆள்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதனால் இது இன்னும் இந்தியா என்பதைத் தாண்டி யு.எஸ்.ஐ. -யுனைட்டட்  ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா என்கிற இது அழைக்கப் பட வேண்டும் என்றே ஆசைப் படுகிறேன். 

ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பில்லா வண்ணம் அதே சமயத்தில் இன்னும் அதிகமாக இனங்கள் மதிக்கப் படுவதற்கும், தங்களது சுதந்திர உணர்வுகளோடு வாழ்வதற்கும் யு.எஸ்.ஐ. வழிவகுக்கும் என்றே நம்புகிறேன். எனவே ஒன்றிணைக்கப்பட்ட இந்தியா என்பதை வலியுறுத்துவதே நல்லது என்று கருதுகிறேன். அதற்கான முதல் படியாகவே இன எழுச்சி என்பதைக் கருத வேண்டியிருக்கிறது.

ஏனெனில் எந்த விதத்திலும் தனி இனம் ஒன்று ஆட்சி அமைப்பது என்பது மெஜாரிட்டேரியன் ஆட்சியாகத்தான் அமையும். அதைத் தவிர்க்க வில்லை என்றால் அது பாசிசத்திற்கே வழி வகுக்கும். ஹிட்லர் ஆட்சி செய்ததைப் போல அல்லது ஸ்டாலின் போல. பாசிசம் என்பது எந்த ஆட்சி தத்துவத்திலும் சாத்தியம் என்பதே நமக்கு வரலாறு சொல்லும் பாடம்.

தனி இனங்களின் அங்கிகாரம் மதிக்கப் படவில்லைஎன்றால் இந்தியா பாசிசப் பாதையில் மிக வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம். அது கூடிய விரைவில் இன்னுமொரு ஹிட்லர், இன்னுமொரு ராஜ பக்சேவை நான் இந்தியாவில் சந்திக்க வைக்கும். அப்போது நாம் கருத்துக்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. - வலைகள் கூட முடக்கப் படலாம். வாய்கள் ஒட்டப் படலாம், கால்கள் ஒடிக்கப் படலாம், கரங்கள் முறிக்கப் படலாம் - அப்போது வெறுமனே ஜெய் ஹிந்த் மட்டுமே சொல்ல வாய் திறக்கும் ஜன நாயக குடி மக்களாக இருப்பார்கள் இந்தியக் குடிமக்கள். இதைத்தானா நாம் நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்ல விரும்புகிறோம்?

[[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]][[[[[[[[[[]]]]]]]]]